
தேர்வுக்காலம் துவங்கி விட்டது. சற்று வளர்ந்த பிள்ளைகள் தங்கள் பொறுப்பு உணர்ந்து படித்தாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இருந்து தொலைக்காட்சியை அப்புறப்படுவது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அதிலும் இந்த தேர்வுக்காலங்களில் மட்டும் "டிவி பார்க்காதே" என்று தடுத்தால் நம்மை விடப் பெரிய வில்லன் யாருமே அவர்களுக்கு இருக்கப்போவதில்லை. பொதுவாகக் குழந்தைகளின் டிவி பார்க்கும் நேரத்தை முறைப்படுத்த சில டிப்ஸ்கள்;
சில விஷயங்களில் குழந்தைகளிடம் கண்டிப்பாகத்தான் இருக்கவேண்டும். கண்டிப்பாக ஹோம் ஒர்க்கை முடித்த பின்னரே டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும்.அந்த அனுமதியும் குறிப்பிட்ட நேரத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். முடிந்தவரை படிப்புக்குப் பின்னர் உங்கள் கண்காணிப்பில் விளையாட அனுமதிப்பது சிறந்தது.
டிவி என்பதைப் பொழுதுபோக்குக்கான ஒன்று என்பதை மெல்ல மாற்ற முயலுங்கள். புதிர் விளையாட்டு, விடுகதை, கதைகள் எனத் தொடர்ந்து குழந்தைகளுடன் நீங்கள் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். உண்மையில் இதைத் தொடர்ந்து செய்தால் ஓய்வு கிடைத்தால் டிவி ரிமோட்டை தேடும் பழக்கம் வெகுவாக குறையும்.
முடிந்த அளவு டிவியை அணைக்கும் போது ரிமோட்டை அதன் அருகிலேயே வைக்கவேண்டாம். தேடி எடுக்கும் வேலையைச் செய்யப்பிடிக்காமல் வேறு பொழுதுபோக்குகளை குழந்தைகள் தேடுவார்கள்.
ஹோம் ஒர்க்கை முடித்தால் டிவி பார்க்கலாம். நல்ல மதிப்பெண் வாங்கினால் நிறைய நேரம் டிவி பார்க்க அனுமதி கிடைக்கும் என்றெல்லாம் டிவியை ஒரு பரிசுப்பொருளாக மாற்றாதீர்கள். அவர்களின் கவனமெல்லாம் அதை நோக்கியே இருக்கும்.
டிவி பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் கையில் நொறுக்கு தீனியை கொடுப்பது அவர்களை அதற்கு அடிமையாக்கும் முக்கியமான செயல். முடிந்த அளவு அதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளின் போது அளவு தெரியாமல் உண்பதால், ஒபிஸிட்டி குழந்தைகள் உருவாகும் முக்கிய காரணமாக இதைச்சொல்கிறனர்.
இந்தியக் குடும்பங்களின் முக்கியத் தவறாக சொல்லப்படுவது குழந்தைகளின் கூச்சலையும், குறுப்புத்தனத்தையும் கட்டுப்படுத்தும் செயலாக நாள் முழுவதும் டிவியை ஓட விடுவதைச் சொல்கிறார்கள். மற்ற அனைத்தையும் விட இதுதான் முக்கியமான ஒன்று. எனவே தேர்வு நேரங்களில் மட்டும் டிவியை நிறுத்தாது பொதுவாகவே அளவான முறையில் பார்க்க வாய்ப்பளிப்பது குழந்தைகளின் படிப்புக்கு நல்லது.
No comments:
Post a Comment